தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை திருவிழா: தங்க கருட சேவையில் நம்பெருமாள்! - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நம்பெருமாள் தங்க கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srirangam Temple Fest
Srirangam Temple Fest

By

Published : Apr 15, 2023, 12:50 PM IST

தங்க கருட சேவையில் நம்பெருமாள்!

திருச்சி : 108 வைணவ தலங்களில் முதன்மையான ஒன்றாகவும், பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி ஆலயத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சித்திரைத் திருவிழாவின் 4 ஆம் நாளான நேற்று (ஏப். 14) மாலை நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். முன்னதாக நம் பெருமாள் கொள்ளிடக்கரை ஆஸ்தான மண்டபத்திலிருந்து கருட வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து மூலஸ்தானம் சென்றடைந்தார். சித்திரை வீதிகள் வழியாகத் தங்கக் கருட வாகனத்தில் வலம் வந்த நம்‌ பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று ரெங்கா..! ரெங்கா..! எனப் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

விழாவின் 4 ஆம் நாளான நேற்று (ஏப். 14) காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார்.

மண்டபத்திலிருந்து காலை 7.15 மணிக்குப் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நண்பகல் 12 மணிக்கு ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார்.

அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்குக் கண்ணாடி அறையைச் சென்றடைந்தார். இன்று (சனிக்கிழமை) காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16 ஆம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

வரும் 17 ஆம் தேதி நெல் அளவு கண்டு அருள்கிறார். 18‌ ஆம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வருகிற 19 ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.

சித்திரை தேர் திருவிழாவில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இதனை ஒட்டி வருகிற 19 ஆம் தேதி திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :மெகுல் சோக்சியை நாடு கடத்த தடை - ஆண்டிகுவா நீதிமன்றத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு!

ABOUT THE AUTHOR

...view details