திருச்சி மாவட்டம் சமயபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் அருகே வசிப்பவர்கள் ரவிசந்திரன்- அனிதா தம்பதி. இவர்களுக்கு நரேஷ் (4) என்ற மகனும், தர்ஷினி (6) என்ற மகளும் இருந்தனர். நேற்று (அக்.08) மாலை இருகுழந்தைகளும் இயற்கை உபாதைகளை கழிக்க பெருவளை வாய்க்கால் கரையோரத்திற்கு சென்றனர்.
வாய்க்காலில் முழு அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கரையில் இருந்த இரு குழந்தைகளும் வாய்க்காலுக்குள் தவறி விழுந்து வாய்க்காலின் நீரில் மூழ்கினர்.
பிறகு இதுகுறித்து உடனே சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் இரண்டு குழந்தைகளையும் இரவு முழுவதும் தேடினர். இதையடுத்து இன்று(அக்.09) காலை 6 மணிக்கு இருகுழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன.
பிறகு இரண்டு குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:வாய்க்கால் நீரில் மூழ்கிய குழந்தைகள், தேடுதல் பணி தீவிரம்!