திருச்சி: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில், பல திட்டங்களையும் உதவித்தொகைகளையும் அரசு வழங்கி வருகிறது. அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் உத்வேகத்தை வழங்கும் வகையில், வானவில் மன்றம் (STEM) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வானவில் மன்றம் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 13,200 பள்ளிகளில் பயிலக்கூடிய 20 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள். இதற்காக 2,000தன்னார்வலர்கள நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் 20 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாதமும் ஒரு பள்ளி என்ற வீதம் முப்பது அறிவியல் சோதனைகளை செய்து அவற்றை STEM செயலியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.