டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காகக் காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன் திருச்சி சுற்றுலா மாளிகையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து சமீபத்தில் நன்றி தெரிவித்தார். இதைதொடர்ந்து, முதமைச்சருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வகையில் இன்று திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்காக நேற்றிரவு விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்தார்.
மேலும், திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு, காவல் துறை அலுவலர்கள் வரவேற்பளித்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று செண்டை மேளம் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில், தினமலர் ஆசிரியர் ஆர். ராமசுப்பு வீட்டிற்குச் சென்றார். தினமலர் பங்குதாரர் ஆர். ராகவன் மனைவி சுப்புலட்சுமி மறைவு குறித்து துக்கம் விசாரித்தார். பின்னர், மறைந்த சுப்புலட்சுமி அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி, மரியாதை செலுத்தினார். பின் திருச்சி சங்கம் உணவகத்தில் அவர் தங்கினார்.
இன்று காலை திருச்சியிலிருந்து, கார் மூலம் புறப்பட்டு திருவாரூரில் நடைபெறும் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகிறார். முன்னதாக, நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கார் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார். அவரும் இன்று நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.
மேலும், முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க:பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வேண்டும் - தமிழ்நாடு முழுவதும் சிஐடியு போராட்டம்