திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 7ஆவது ஆண்டாக தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான ஜமால் முகமது கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. அக்கல்லூரியின் மைதானத்தில் இன்று அரையிறுதி, இறுதிப் போட்டி நடைபெற்றது.
அரை இறுதி போட்டிகளில் கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கிலும், சென்னை லயோலா கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதி போட்டியில் விளையாட தகுதிப் பெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதி போட்டியில் இரு அணிகளும் முழு நேர அளவில் கோல் அடிக்காத காரணத்தால் டை பிரேக்கர் முறை கடைபிடிப்பட்டது. அதில் சென்னை லயோலா கல்லூரி அணி 5-3 என்ற கோல் கணக்கில் கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வென்று முதலிடம் பிடித்து ஜமால் முகமது கோப்பையை கைப்பற்றியது.
தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி மூன்றாவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் திருச்சியைச் சேர்ந்த பிஷப் ஹீபர் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி செயலாளர், தாளாளர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.