திருச்சி:ஸ்ரீரங்கத்தில் விஏஒ-ஆகப் பணியாற்றி வருபவர், வரகனேரி கல்பாளையத்தைச் சேர்ந்த கலைவாணி. இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் உள்ள MAJ traders என்ற கடையில் சமையலுக்கு புளி வாங்கி சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (மே 15) 'இந்த புளி சரியில்லை உன்னிடம் தான் வாங்கினேன்' என்று கடைக்காரர் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் கடைக்காரர் இப்ராஹிம், விஏஓ கலைவாணி ஆகியோரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து, இப்ராஹிமின் கடையிலிருந்த பெண்கள் சிலர் விஏஓ கலைவாணியை அப்போது தள்ளிவிட்டதோடு அங்கிருந்து விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஏஓ கலைவாணியோ, அங்கு கடை வைத்திருந்த தனது உறவினர்களை அழைத்து வந்து கடைக்காரர் மற்றும் அங்கிருந்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இதனிடையே, இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் அங்கும் இங்குமாக விரட்டியபடி மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இந்நிலையில், அங்கிருந்த பெண்கள் சிலர் விற்பனைக்காக வைத்திருந்த பாத்திரங்கள், காய்கறிகள் என கையில் கிடைத்தவற்றை அள்ளி ஒருவர் மீது மற்றொருவர் வீசிக் கொண்டனர். இதனால் காந்தி மார்க்கெட் முழுவதும் கலவரமாக காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சம்பவம் குறித்து விஏஓ கலைவாணி உள்ளிட்ட இரண்டு தரப்பினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.