காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அலுவலக கூட்டரங்கில் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் நவீன்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழுவின் 19வது கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. வழக்கம் போல கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. முன்னதாக கல்லணையில் நீர் விநியோக முறை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. காவிரி படுகையில் மழைப்பொழிவு திருப்திகரமாக உள்ளது. மாநிலங்களுக்கிடையிலான காவிரி நீர் பங்கீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல் பிலிகுண்டு முதல் காரைக்கால் வரையிலான 7 இடங்களில் ஒட்டுமொத்த நீர் அளவு போதுமான அளவில் உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து அடுத்துவரும் கூட்டங்களில் விவாதிக்கப்படும். மேலும் இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் விவாதிக்கப்பட்டது.