திருச்சி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி தினகரன் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்.2-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சனாதன தர்மத்தை பற்றி பேசியதாகவும், அவர் பேசிய காணொளியை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பா.ஜ.க-வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து ,சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை கடந்த 2 ஆம் தேதி பதிவிட்டுள்ளளார்.
அமித் மாளவியாவின் இந்த பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி தான் ஒருபோதும் பொதுமக்களின் இனபடுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை, சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும், கரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு தீங்கிழைப்பது போல சனாதன தர்மம் சமுதாய தீங்கிற்கு பொறுப்பாகிறது என்றும், எனவே இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என்றும், எக்ஸ் பக்கத்தில் பதில் பதிவிட்டுள்ளார்.