திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் வனப்பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காலை அவ்வழியாக சென்றவர்கள் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதைக் பார்த்தனர். அப்போது காரின் அருகே சென்று பார்த்தபோது எரிந்த நிலையில் மனித உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரில் இருந்த உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது.
இதனையடுத்து உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் காவல்துறையினர் காரில் எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஆணா? பெண்ணா? என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். எனினும் உடல் கூறு ஆய்வுக்குப் பின்னரே இது குறித்த உறுதியான தகவல் வெளியாகும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.