திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. இந்தப் போட்டியில் 900 காளைகள் பங்கேற்றுள்ளன.
இந்தப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், சுக்காம்பட்டி ராஜகிரியைச் சேர்ந்த பழனியாண்டி (55) என்ற காளை உரிமையாளர் தனது காளையுடன் இன்று கலந்துகொண்டார்.
அப்போது கலெக்ஷன் பாயிண்ட் என்ற மாடு பிடிக்கும் இடத்தில் தனது மாட்டைப் பிடிக்க கயிறு வீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பழனியாண்டி தடுமாறிக் கீழே விழுந்தார் .
அப்போது கண்ணிமைக்கும் நொடியில் மற்றொரு காளை பழனியாண்டியை மிதித்தது. இதில் படுகாயமடைந்த பழனியாண்டியை முதலுதவி சிகிச்சை மையத்திற்கு அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்ற நிலையில், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.