ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 30 அடியிலிருந்த குழந்தை சுர்ஜித் மீட்புப் பணியின்போது 68, 70, 80 என கீழே சென்றுவிட்டதால் மீட்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குழந்தையை மீட்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர்.
சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்! - 24 மணி நேரமாக நீடிக்கும் மீட்புப் பணி - 80 அடிக்குச் சென்ற குழந்தை சுர்ஜித்
திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது.
இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என்று பேரிடர் மீட்புக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தையை மீட்கும் கடைசி முயற்சியாக சுரங்கம் தோண்டப்படுகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"என்எல்சி என்ற தனியார் அமைப்புடன் இணைந்து சுரங்க குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முயற்சி மேற்கொண்ட நிலையில் என்எல்சி வல்லுநர்கள் மூலம் அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி தெரிவிக்கப்படும். மணல் மூடியுள்ளதால் குழந்தை சுர்ஜித்தின் நிலை குறித்து தெரியவில்லை" என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.