திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டெண்ட்மெண்ட் மண்டல தலைவர் பரமசிவம் தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியுடன் மோதல் போக்கை திமுக கட்சி செய்துகொண்டிருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளாக திமுகவினர் கிளப்பிவிட்ட நரேந்திர மோடி எதிர்ப்பு, சமூக ஊடகங்கள் எப்படிப்பட்ட அவதூறுகளை பதிவிட்டார்கள் என்பது தெரியும். மோடியை பச்சையாகவும், கொச்சையாகவும் அவதூறு பரப்பினார்கள்.
இதையெல்லாம் புகார்கள் மூலமாக அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். திமுக அரசு வந்த பிறகு சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் மீது விமர்சனம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாமல் இதுவரை பாஜக தொண்டர்கள் 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறது திமுக. நான்கு நாள்களுக்கு முன்னதாக ஆளுநர் தர்மபுர ஆதீனத்தை சந்தித்து வரும்போது கறுப்புக்கொடி எறிந்து கலவரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆளுநர் என்பவர் பாஜகவின் அடையாளமல்ல தமிழ்நாட்டில் அடையாளம். இவர் அமைச்சரவைக்கு ஆளுநர் ஆலோசனை சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். திமுக தொடர்ந்து தொண்டர்களை வைத்து பாஜகவை அச்சுறுத்தி பணியவைக்க முயற்சித்தால் திமுக தோற்றுப்போகும்.