குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியது. இச்சட்டம் நிறைவேறியது முதல் இன்று வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் இச்சட்டத்திற்கு ஆதரவளித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பல இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி நடைபெற்றது. இதில், அகில இந்திய பொதுச்செயலாளர் ரா மாதவ், இல. கணேசன், நடிகை கௌதமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணிகளில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேசியக் கொடியுடனும், பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பேரணியில் செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன்!
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இல. கணேசன் கூறுகையில், ”கன்னியாகுமரி உதவி காவல் ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
தீவிரவாதிகளுடன் வீரத்துடன் போராடிய காவல்துறை அதிகாரிக்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகளை போலீசார் கைதுசெய்திருப்பது பாராட்டுக்குரியது.
யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலும், குடியுரிமை வழங்கத் தகுதி உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.” என்றார்.
இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்