திருச்சி:பாஜகவின் சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (பிப்.19) திருச்சியில் நடந்தது. அதில் பங்கேற்ற மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்சி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜக கட்சியும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற பரப்புரையை தமிழ்நாட்டில் வலுவாக செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். திமுகவின் பொய்யான பரப்புரையை உடைத்து மலர்ச்சியுடன் சிறுபான்மை அணியினர் வளர்ந்து கொண்டிருப்பதாகவும்; எனவே கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தினர் அதைப் புரிந்துகொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையின மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகவும், இதை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதாகவும், இந்த போதை கலாசாரத்தில் மூழ்கிய தமிழ்நாடு இளைஞர்கள் உழைக்காமல், வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகவும் கூறினார். இதனால், தமிழர்களின் நிலை முயல், ஆமை கதையாக மாறி வருவதாகவும்; இதனால், தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
எனவே, தமிழ்நாடு அரசு புயல் வேக நடவடிக்கையால், மாநிலத்தில் போதை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். இஸ்லாமியர்களுக்குள் பெரிய வன்முறைகள் நிகழ்வதாகவும், அவற்றை தவிர்க்க பாஜக சிறுபான்மை அணி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதிகமான தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் விளையாட்டுகளை அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் அதிகம் என்றும்; எனவே, முதலில் ஒழிக்க வேண்டியது போதைப்பழக்கத்தை தான் என்றும் பதில் கூறினார்.