திருச்சி:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான, பாஜக நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் ஆலோசனை கூட்டம், மணப்பாறை - மதுரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (டிச.27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், பாஜகவில் இணைந்த நிர்வாகிகள் முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அமைப்பாளர் செந்தில்நாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக, பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக மக்களுக்கு எவ்வாறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது, மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதேபோன்று, பூத் கமிட்டி அமைக்கின்ற பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் மக்களை நேரடியாக சந்திக்கின்ற வகையில், வீடு தோறும் பாஜக ஒவ்வொரு நபரையும் நேரடியாக சந்திக்க இருக்கின்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக, மக்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சியாக இன்றைய தினம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.