திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் 21 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை, சில்லறைக் கடன், சுய உதவிக் குழு, வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்வி மற்றும் தனிப்பட்ட நுகர்வோர் கடன் உள்ளிட்ட கடன்கள் இந்த முகாமின் மூலம் வழங்கப்பட்டது. மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேற்பார்வையில், மற்ற உறுப்பினர் வங்கிகளும் ஒருங்கிணைந்து இந்த முகாமினை நடத்தின.
இந்த முகாமில் வங்கியில்லாத என்பிபிசி நிதி நிறுவனம், சிறு நிதி நிறுவனம் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஆகியவை கலந்து கொண்டன. இந்த முகாமில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் மறு சீரமைப்பு மற்றும் ஒரே தவணையில் வராக்கடன் தீர்வு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை வரை நடந்த முகாமில் 714 பயனாளிகளுக்கு ரூ.97.41 கோடி கடன் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாம் இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய பொது மேலாளர் பத்ரோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ’மத்திய அரசின் உத்தரவுப்படி வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான முயற்சியாக இந்த முகாம் திருச்சியில் நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக 250 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 150 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. திருச்சியில் நடைபெறும் இந்த இரண்டு நாள் முகாமில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அதனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளுக்குச் சென்று கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்றார்.
மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் பிரேம்குமார் கூறுகையில், ’இங்கு அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து முகாம் நடத்தப்படுகிறது. இது தொடக்கம்தான். நாளையும் இங்கு முகாம் தொடர்ந்து நடைபெறும். இதன் பின்னரும் அந்தந்த கிளைகளில் இந்த கடன் வழங்கும் முகாம் நடைபெறும். சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் 15 நாட்களில் வழங்கப்படுகிறது’ என்றார்.
இதையும் படிக்கலாமே: வங்கியில் கடன் தராததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!