தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 33 நாள்களாக கரோனா தாக்குதலால் அனைவருக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. வேலைக்கு செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய், உணவுப் பொருள்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது.
அதேபோல் விவசாயிகள் இரண்டு லட்சம் ரூபாய்வரை செலவு செய்து வாழை, வெற்றிலை ஆகியவற்றை பயிரிட்டிருந்தனர். வெற்றிலை தற்போது காய்ந்துவிட்டது. சூறாவளியில் வாழை உடைந்து விழுந்துவிட்டது. அதேபோல் கரும்பு காய்ந்து விட்டது. மாங்காய், பலா, தென்னை விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. நெல் விற்ற பணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் வழங்குவது போல் விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.