தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2020, 10:43 PM IST

ETV Bharat / state

'விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' - அய்யாக்கண்ணு!

திருச்சி: விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைத்திட மத்திய அரசின் பட்ஜெட்டில் வழிவகை செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பேசிய அய்யாக்கண்ணு
பட்ஜெட் குறித்து பேசிய அய்யாக்கண்ணு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,

'விவசாயிகளை இந்த நாட்டின் அடிமைகளாக யாரும் பார்க்க வேண்டாம். ஒரு ஏக்கர் விவசாயத்திற்கு எவ்வளவு செலவாகிறதோ அதை விட 50 விழுக்காடு சேர்த்து வழங்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருந்தார். அதேபோல், பிரதமர் மோடியும் இரண்டு மடங்கு லாபம் தருகிறேன் என்று கூறினார்.

அவர் கூறியதுபோல் எங்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். ஒரு ஆசிரியர் இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்தால், எங்களுக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். அதை மட்டும் இந்த பட்ஜெட்டில் கொடுத்துவிட்டால் இலவசம், சலுகை, கடன் தள்ளுபடி எதுவும் எங்களுக்கு வேண்டாம்.

லாபகரமான விலை எங்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றால் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். நதிகள் இணைக்க நிதி ஒதுக்க வேண்டும். நாங்கள் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தோம். அப்போது இந்த மாநில அரசு, அனைத்து விவசாயிகளுக்கும் 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், பென்சன் வழங்கப்படும், நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது.

அதனால், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளில் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு வறண்ட மாநிலமாகவும், பாலைவனமாகவும் மாறாமல் இருக்க ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்க வேண்டும்.

கோதாவரியிலிருந்து 500 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட வேண்டும். கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே 177 டிஎம்சி தண்ணீர் தான் பிரச்னை. இந்தச் சூழ்நிலையில் கங்கை, காவிரி இணைத்து விட்டாலே எங்களது பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

விவசாயிகளுக்கு பென்சன் முக்கியமானதாகும். முதுமையில் மண்வெட்டி போல் விவசாயிகள் உடலாலும், உள்ளத்தாலும் தேய்ந்து விடுகின்றனர். 60 வயதுக்கும் மேல் விவசாயியை கவனிக்க யாருமே கிடையாது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெற்ற மகனும், மகளுமே விவசாயியை கவனிக்க மறுக்கிறார்கள். இதனால், விவசாயிகள் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து பேசிய அய்யாக்கண்ணு

ஆதலால், மாதந்தோறும் விவசாயிகளுக்கு பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதை 10 அல்லது 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டால் விவசாயிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதற்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: 'எந்த எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் இல்லை' - சிறு குறு தொழில் அமைப்புகள் வேதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details