தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, பழங்குடி சீர்மரபினர் சாதி சான்றிதழ் பிரச்னை தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் வளர்மதியை சந்திப்பதற்காக உறையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அமைச்சர் வளர்மதி திருச்சி கருமண்டபம் அருகே உள்ள தீரன் நகரில் நடைபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வு அறை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். சிறிது நேரம் அங்கு காத்திருந்த அய்யாக்கண்ணு தரப்பினர், திடீரென அமைச்சர் வளர்மதி வீடு முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதாக வாட்ஸ் அப் குழுக்களில் தகவலை பரப்பினர்.
இதையடுத்து வளர்மதி வீட்டிற்கு காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என அனைவரும் படையெடுத்தனர். பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த சிறிது நேரத்தில் அமைச்சர் வளர்மதி வீடு திரும்பினார். பின்னர் அமைச்சர் வளர்மதியின் வீட்டில் உள்ள அலுவலக அறையில் அய்யாக்கண்ணு, நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.