திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திரா பக்தர்கள் மீது தாக்குதல் திருச்சி:108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவது ஶ்ரீரங்கம் கோயில் ஆகும். ஶ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஶ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழாவானது, இன்று திருநெடும் தாண்டகம் என்னும் உற்சவத்தின் மூலம் துவங்க உள்ளது. இதன் துவக்க நாளான இன்று, காலையில் ரங்கநாதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கர்நாடகா, ஆந்திரா ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலால், அடிதடி உருவாகி அங்கு ஆந்திரா ஐயப்ப பக்தர் சென்னராவ் உள்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்களை தாக்கிய தற்காலிக ஊழியர்களான செல்வம், விக்னேஷ், பரத் குழுவினர் மீது சென்னராவ் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
தாக்குதலுக்கு ஆளான ஐயப்ப பக்தர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு கோயிலில் உள்ள காவல்துறையினர், அடிபட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இல்லாமல், தாக்குதல் நடத்திய கோயில் ஊழியர்களுக்கு துணைபுரிந்து தாக்குதலுக்கு உள்ளாகி காயம்பட்டவர்களை கோயிலுக்கு வெளியே தள்ளிகொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை கோபுரம், கொடிமரம் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். அப்போது தங்களை தாக்கிய தற்காலிக ஊழியர்களான மூவர் மீதும், கோயில் நிர்வாகத்தின் மீதும் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், “இந்து தர்மத்தின் மீது நம்பிக்கையில்லாத அரசு, இந்து கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பிய உடன் ரங்கநாதரை தரிசிக்க விரும்பினர்.
ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது கோயிலுக்குள் தகராறு ஏற்பட்டு ரத்தகளறி ஆகியுள்ளது. கோயில் நிர்வாகத்தில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் என்பதற்கு அவர்களின் திமிரான நடவடிக்கை பல காரணங்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோயிலில் புனிதத்தை கெடுக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட பிரிவினர் இன்று கோயிலின் வெளியே போராட்டம் நடத்த உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோயில் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில், ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள், உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள்.
இதனை தட்டிக்கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியைப் பிடித்து, அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். எனவே ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தட்டி கேட்ட காவலரையும் ‘போலீஸ் டவுன் டவுன்’ என்று கோஷம் எழுப்பினார்கள். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல், இடையூறு செய்ததால் உடனே காவல்துறையில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ரஜினி கட்சி தொடங்கி, தனித்து போட்டியிட வேண்டும் என வீரப்பன் விரும்பினார்” - நக்கீரன் கோபால்