திருச்சி: முசிறியை அடுத்த பேரூரை சேர்ந்தவர் நீலமேகம். துணை ராணுவ படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி (29) மற்றும் குழந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த எட்டே முக்கால் சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காஷ்மீரில் பணியில் இருந்த ராணுவ வீரர் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்ட நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி உறுதி அளித்தார்.
டிஜிபி உறுதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து முசிறி ஜெம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை திருப்திகரமாக இல்லை எனக்கூறி, விரைந்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விடுப்பில் வந்துள்ள ராணுவ வீரர் நீலமேகம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.
இது குறித்து பேசிய அவர், கொள்ளைச் சம்பவத்திற்கு பிறகு வீட்டில் இருக்கவே அச்சமாக உள்ளதாக மனைவி தெரிவிப்பதாகவும், எனவே அவரது தாயார் வீட்டில் சென்று வசித்து வருவதாகவும், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்!