திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் முன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றிய வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில், “இந்த வழக்கில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வைஷ்ணவஸ்ரீயையும், தயானந்த சரஸ்வதியையும் சேர்த்து பொய் வழக்கு போடப்பட்டது.
இதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த வழக்கிற்கான வாய்தா இன்று (ஜூலை 4) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற ஜூலை 17ஆம் தேதி முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். நீதித்துறையின் செயல்பாடுகள் விசித்திரமாகவும் வியப்பளிப்பதாகவும் உள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி அவரது மனைவி வாயிலாக தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை கொடுத்துள்ளனர். அமலாக்கத்துறை செய்வது சரிதான் என்றும் மற்றொரு நீதிபதி மருத்துவ சிகிச்சை முடிந்த பின் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு கூறி உள்ளனர். இந்த மாறுபட்ட தீர்ப்பு தலைமை நீதிபதியிடம் சென்றுள்ளது. அங்கேயாவது நீதி நிலை நாட்டப்படுமா என்று தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீதித்துறை வாயிலாக இந்திய அரசுக்கும்,இந்துக்களுக்கும்,சனாதன தர்மத்துக்கும் எதிராக பல்வேறு காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தடுக்கப்படுகிறது. பல்வேறு அநீதிகள் நிகழ்வதால் நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் செய்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்காகத் தான் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு செய்யப்படுகிறது.