திருச்சி அப்போலோ மருத்துவமனை கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மயிலன் சின்னப்பன், கெவின் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், "கழுத்து வலியால் தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு மேல் அவதிப்படுவோர் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பின்னரும் கழுத்து வலி தொடர்ந்தால் அது குறித்து மருத்துவர்களிடம் உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும்.
கழுத்து வலியைத் தொடர்ந்து கை, கால்களில் வலி ஏற்பட்டு, நடக்க முடியாத நிலை ஏற்படும். அதோடு சிறுநீரும் வெளியேறாத நிலை ஏற்படுமாயின் அது கழுத்து தண்டுவட பாதிப்புக்கான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரைச் சென்று சந்தித்தால் இதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம். அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த அரசு தொழிற்பயிற்சி மைய பயிற்சியாளர் இளங்கோவன் (54) என்பவருக்கு கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இடது கால் செயலிழந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஏற்கனவே வலதுகால் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் இடது காலில் ஒருவித இறுக்கமும், ஒருவிதமான பலவீனமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு தோள்களிலும் வலியும், பலவீனமும் இருந்தது. ஒரே கால் மூலமே உடலின் எடையைச் சுமந்து நடந்ததால் ஏற்பட்டிருக்கும் தொய்வு என்று அவர் இருந்துவிட்டார். முழுமையாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டதில், கழுத்து தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.