திருச்சி:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளில், நேற்று முன்தினம் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று (நவ. 08) மாலை திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு காந்தி மார்க்கெட் பகுதியில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார்.
பின்னர் பேசிய அண்ணாமலை, “ராமேஸ்வரத்தில் துவங்கிய யாத்திரை, 103 தொகுதிகளைத் தொட்டு எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொது நலத்தோடு கடுமையாக உழைப்பவர்களுக்கு வெகுமதி கொடுப்பது இந்திய மக்களின் பழக்கம். அவர்களுக்கு பாதுகாவலனாகவும் இருப்பார்கள்.
மோடியைப் பொருத்தவரை, சாதாரண மக்கள் எதிர்பார்க்கும் பிரதமராக இருக்கிறார். 2024 தேர்தலில் மோடியை மீண்டும் பிரதமராக்குவார்கள். காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வெறும் 2 சதவீதமாகத் தான் இருந்தது. பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் சொந்தக் காலில் நின்று இந்தியாவை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியில் 11-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது சாதாரண சாதனை இல்லை.
சாதாரண மனிதர்கள் ஆட்சிக்கு வரும் போது, ஏழை மனிதனின் கண்ணீரும், கஷ்டமும், பசிக் கொடுமையும் தெரியும். சாதாரண மனிதர்கள் ஆட்சிக்கு வராமல் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின், அடுத்து முதல்வராகவும், ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சராகவும் இருந்தால் மக்களின் கண்ணீரும், பசியும் எப்படித் தெரியும்.
ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் வீதம், 10 லட்சம் கோடி ரூபாய் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்கான திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது. வேறு எதைப் பற்றியும் பேசாமல், மோடி இந்தியைத் திணிக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். மோடி, உலக மக்களுக்கு, தமிழை எடுத்துச் சென்றுள்ளார். அதனால், தமிழைத் திணிக்கிறார் என்று தான் திமுகவினர் குற்றச்சாட்டு வைக்க வேண்டும்.
புதிய பார்லிமெண்ட்டில், தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக, நம்முடைய கலாச்சாரத்தின் சின்னமான செங்கோலை வைத்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில், தாய் மொழி தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார். புதிய அரசியலைக் காட்டுவதற்கான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறோம். கோயில் வாசலில், கடவுளை நம்புபவன் முட்டாள் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளனர். அதை அகற்றுவோம் என்று தெரிவித்தேன்.
இந்த யாத்திரை முடியும் போது, மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருப்போம். மதங்களைப் பிளவுபடுத்தியோ, காட்டுமிராண்டித் தனமாக ஜாதிகளை வைத்தோ திமுகவைப் போல் அரசியல் இருக்காது. திருச்சியில் திமுக அமைச்சர்களாக இருக்கும் நேருவுக்கும், மகேஷ் ஆகிய இரண்டு தலைவர்களுக்கும் ஆகாது. ஆனால், தலைநகராக்கலாம் என்று உத்தேசித்த திருச்சி முன்னேறக் கூடாது, என்பதில் இருவரும் ஒற்றுமையாக உள்ளனர்.
தமிழகத்தில், 2022-இல் வெளியிட்ட சி.ஏ.ஜி அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில், 11 ஆயிரத்து 711 வகுப்பறைகள் குறைவாக உள்ளது. அதனால் மேற்கூரை இல்லாத வெட்டவெளியிலும், பள்ளியின் ஆய்வகத்திலும் குழந்தைகள் அமர்ந்து படிக்கின்றனர். 18 ஆயிரத்து, 862 ஆசிரியர் காலியிடம் உள்ளது. மொத்த ஆசிரியர் பணியிடங்களில், 15.87 சதவீதம் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் பலவாறாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.