தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கசாப்பு கடைக்குச்செல்வதற்கு முன், ஆட்டைப் பிடித்து பார்த்ததுபோல் தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது - அண்ணாமலை - செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளிவர முடிவு செய்துவிட்டு ஒரு வாரமாக பிதற்றுகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், அவர், கசாப்பு கடைக்குச் செல்வதற்கு முன், ஆட்டைப் பிடித்து பார்த்தது போல் தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது என விமர்சித்தார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

By

Published : Mar 3, 2023, 4:01 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

திருச்சி:சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதுமாக துடைக்கப்பட்டிருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சி தான்.

பாஜகவில் அனைவரும் அடிப்படையில் உழைப்பு செய்ததால் தான் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் இல்லை, வழிநடத்தும் தலைவர்களும் இல்லை. அது தான் அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். இந்த வெற்றி திமுகவின் 23 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல. 2024ஆம் ஆண்டு தேர்தல்களம் முற்றிலும் வேறுபட்டது. பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்தும் நடக்கும் தேர்தல்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். ஒரு வாரமாக அவர் ஏன் பிதற்றுகிறார் எனத் தெரியவில்லை. பட்டியலின மக்கள் பாஜக-விற்கு அதிகமாக வருகிறார்கள். திமுக-வும் விசிகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துவிட்டதைப்போல் தான் தெரிகிறது. ஆரம்ப கால அறிகுறிகள் தெரிகின்றன.

திருமாவளவன் கண் முன்னால் அவர் கோட்டை எனக் கூறப்படும் கடலூரில் பாஜக வளர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம். யாரையும் அரவணைப்பது என் கடமையல்ல. 2021-க்கு முன்பு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஒரு கட்சி இன்னொரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் எனக் கூறினால் அது ஜனநாயகமாக இருக்காது.

நான் பாஜகவின் தலைவராக இருக்கும் வரை மற்ற கட்சியின் பிரச்னையில் பாஜக தலையீடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல. பிரதமர் மோடியை விஷ்வகுருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கசாப்பு கடைக்குச் செல்வதற்கு முன், ஆட்டை பிடித்து பார்த்தது போல் தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது.

பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் என நினைப்பது தவறு, அரசுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு இருக்கும். அதனால் தான், அதிமுக 2021ஆம் ஆண்டு தோல்வியடைந்தது. காலங்கள் மாறும்; காட்சிகள் மாறும்; 2024ஆம் ஆண்டிலிருந்து 2026 வரை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். 2024 தேர்தல் பாஜகவிற்கானது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பாஜகவை விமர்சிக்கிறார்கள். டிஜிபி ஓய்வு பெறுவதால் தமிழ்நாட்டை அமைதிப்பூங்கா என கூறி வருகிறார்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி..

ABOUT THE AUTHOR

...view details