அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் - முத்தரசன்
திருச்சி: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி மிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் விளைவித்து வருகிறது. பிற்படுத்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினோம்.
அக்டோபர் 28 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை விவசாயிகள், தொழிலாளர்களுக்காக மாபெரும் மாநாட்டை தஞ்சாவூர், மதுரை, சேலம், திருச்சியில் நடத்த உள்ளோம்.
நவம்பர் 26ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடைபெறும்.
பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தவர்கள் அதிகமான பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். முதலமைச்சர் தாயார் இறப்பிற்கு அமித்ஷா இரங்கல் தெரிவித்திருப்பது அவருடைய மொழி வெறியினை வெளிப்படுத்தியுள்ளது.
எங்களுடைய கூட்டணி மிகவும் பலம் பொருந்திய சக்தி வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மாநில அரசுக்குத் தெரியாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது கண்டிக்கத்தக்கது. இதற்காக அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.