திருச்சி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை புறந்தள்ளி ஆடல் பாடல் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது. சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடுவதாக இருந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி, காலப்போக்கில் பெண்கள் அரைகுறை ஆடைகளை உடுத்திக் கொண்டு ஆடுவது, இரட்டை அர்த்த வசனம் உள்ள பாடல்களுக்கு மது அருந்தியவாறு சக ஆண் நடன கலைஞர்களுடன் கட்டிப்பிடித்து ஆடுவது என ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றது.
இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளால், இளைஞர்களிடையே கலாச்சார சீரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்களால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அதன் எதிரொலியாக ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு என சில விதிமுறைகளை வரையறுத்து, அதனை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களாக ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்க கூடாது, பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ,வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது. இரட்டை அர்த்த பாடல், நிகழ்ச்சியில் இடம்பெறக் கூடாது, அனுமதி கோரிய மனுவின் மீதான முடிவினை 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.
7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம் என வரையறைகளை வெளியிட்டது. அதனைப் பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி அந்த வழிகாட்டுதல்களை கண்காணிக்க வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.