திருச்சி:மணப்பாறையில் நகர்மன்றத்தலைவருக்கான மறைமுகத்தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர்கள் 11 மற்றும் அதிமுக கவுன்சிலர் 11, சுயேச்சை கவுன்சிலர் 5 இருந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் திமுக சார்பில் 25ஆவது வார்டு உறுப்பினர் கீதா மைக்கேல் ராஜ் மற்றும் அதிமுக சார்பில் 27ஆவது வார்டு உறுப்பினர் ராமன் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து 27 வார்டு உறுப்பினர்களும் வாக்குகளைப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலரும் கோட்டாட்சியருமான வைத்தியலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட 25ஆவது வார்டு உறுப்பினர் கீதா மைக்கேல் ராஜ்-18 வாக்குகளும், அதிமுக உறுப்பினர்- 8 வாக்குகளும் பெற்றனர்.
இதில் ஒரு வாக்கு செல்லாதது ஆகும். 18 வாக்குகள் பெற்று கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கீதா மைக்கேல் ராஜ் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்கள் வெற்றி பெற்ற கீதா மைக்கேல்ராஜூக்கு வாழ்த்துத்தெரிவித்தனர். இதனையடுத்து மணப்பாறை வந்தடைந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நகர் மன்றத்தலைவர், ஊர்வலமாக சென்று, பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கும், கலைஞரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.