திருச்சி: 3000 ரூபாய் லஞ்சத்தொகை பெற்ற விபச்சார தடுப்புப் பிரிவின் உதவி ஆய்வாளர் ரமா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் சரத், இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
இவர் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி பராமரித்து வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். மேலும் அஜிதா மீது அந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜிதாவின் மீதான இந்த வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருவதாகக் கூறி பத்தாயிரம் ரூபாய் லஞ்சத் தொகையை விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமா கேட்டுள்ளார். இல்லாவிட்டால் அவர் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்வதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
அஜிதா ஏற்கனவே தன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் தற்போது கடை நடத்தவோ பத்தாயிரம் ரூபாய் பணத்தை தரவோ முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் உதவி ஆய்வாளர் ரமா 3000 ரூபாய் முன் பணம் கொடுத்தால் மட்டுமே வழக்கை சாதகமாக முடித்து தருவதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு வேலை கிடைத்த பிறகு மனைவி, குழந்தையை விரட்டிய நபர்.. பீகாரில் நிகழ்ந்த சம்பவம்!
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
இன்று (ஜூலை 17) காலை சுமார் 11.00 மணி அளவில் அஜிதா 3000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு உதவி ஆய்வாளர் ரமாவை நேரில் சந்தித்து, லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். அதனை பெற்ற போது ரமா கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ரமா விபச்சார தடுப்புப் பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றிவருவது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் திருச்சி மாநகரத்தை பொறுத்தவரையில் 60 ஸ்பா மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும்; ஒவ்வொரு ஸ்பா சென்டரில் இருந்தும் மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையான பணத்தை உதவி ஆய்வாளர் ரமா தனது வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் பெற்றுவந்துள்ளது தெரியவந்தது.
மேலும், ஒவ்வொருமாதமும் லஞ்சமாகப் பெற்ற இந்த தொகையை ரமா தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் உதவி ஆய்வாளர் ரமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா ஊழல் வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு அனுமதி கிடைக்கவில்லை என 11வது முறையாக கூறிய