கட்டு கட்டா கடத்தி வரப்பட்ட அமெரிக்க டாலர்கள் திருச்சி:தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணி ஒருவர் வெளிநாட்டு கரன்சி கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியை சோதித்த போது அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த Rs.74,19,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்த ஆண் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட பணம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த கடத்திவரப்பட்டதா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை கார் குண்டு வெடிப்பு - 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்