பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி மாநாட்டில் கண்டனம் திருச்சி: அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநாடு திருச்சியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சேர்மன் அமிதாப் பௌமிக் மாநாட்டினை துவக்கி வைத்தார். அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பொது செயலாளர் திலீப் சகா செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநாட்டில் வங்கிகளில் நிலவும் காலிப்பணியிடங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். ஆள் பற்றாக்குறை காரணமாக வங்கி சேவை பாதிக்கப்படுவதாகவும், மேலும் மத்திய அரசின் தனியார் மயமும் தங்களை வாட்டி வதைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
அரசின் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தும் பட்சத்தில், வங்கிகள் தனியார் மயம் என்ற கோட்பாட்டினால் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார். தனியார் வங்கிகள் லாப நோக்குடன் மட்டுமே செயல்படுவதாகவும், இதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்றார்.
ஏழைகள் உயர வழி இல்லை என்றும் அரசின் இத்தகைய கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கையே காரணம் என எச்சரிக்கை தெரிவித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களால் மக்களின் பணம் வீணாகிறது என்றும் இதனால் இந்தியாவிற்கு ஏற்ற உரிய பொருளாதாரக் கொள்கை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாரா கடன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவர்களை சிறையில் அடைத்து, பணத்தை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சேவை நோக்கிலேயே இயங்கி வருவதாகவும், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது ஏழை மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.
பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் எனவே எங்களுடைய முக்கியமான கோரிக்கையாக தனியார் மையம் கூடாது என்பதுதான் என்று தெரிவித்தார். அதே நேரம் அரசியல் குறுக்கீடு இன்றி பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சங்கத்தின் கோயம்புத்தூர் வட்டார தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் சங்கத்தின் திருச்சி வட்டார தலைவர் ராம்மோகன், சங்கத்தின் அமைப்பு செயலாளர்கள் உதயகுமார், சிவகுமார், சங்கத்தின் தமிழ்நாடு மாநில உதவி பொது செயலாளர் நெல்சன், தெலுங்கானா மாநில உதவி பொது செயலாளர் வெங்கன்னா, ஆந்திர பிரதேஷ் மாநில உதவி பொது செயலாளர் நரையா பகதாலா, கர்நாடகா மாநில உதவி பொது செயலாளர் ஸ்ரீதர் படாகி, கேரள மாநில உதவி பொது செயலாளர் செல்வக்குமார் மற்றும் தமிழ்நாடு மாநில வங்கி பணியாளர்கள் சங்க பொது செயலாளர் சங்கர வடிவேல் மற்றும் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 5 மாதங்களாக தாய்-சேய் மரணமின்றி சிகிச்சை.. புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அசத்தல்!