திருச்சி:திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை திருவிழாவை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லை நகரில் மக்கள் மன்றத்தில் இன்று (அக் 1) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “டெங்கு வராமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றார் போல் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியை பொறுத்த அளவில் 30ஆம் தேதிக்குள் வெள்ள தடுப்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டப்படப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 50 நாட்களாக மாலை நேரங்களில் அதிக மழை பெய்வதால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.
அதேபோன்று, பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.