செய்தியாளர்களைச் சந்தித்த அலிஷா அப்துல்லா சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி சூர்யா சிவா மற்றும் பத்திரிகையாளர் முக்தார் நடத்திய நேர்காணலில் என்னை பற்றி மிகவும் தவறாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். நான் பாஜவில் இணையும்போது என்னை வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என திருச்சி சூர்யா தொலைபேசியில் கூறினார்.
நான் நேரடியாக வாருங்கள் நடத்திக் கொள்ளலாம் என என்னுடைய அலுவலகத்திற்கு அவரை அழைத்தேன். அவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து பேசிய, அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. நான் அந்த ஆதாரத்தை அமர் பிரசாத் ரெட்டியிடம் கொடுத்துள்ளேன்.
திருச்சி சூர்யா என்னுடைய அலுவகலத்திற்கு வரும்போது குடித்துவிட்டு வந்ததுபோல் தான் தெரிகிறது. என்னை இளைஞர் மட்டும் விளையாட்டு பிரிவிலிருந்து மகளிர் அணிக்கு மாற்றிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். உடைகள் அணிவது குறித்தும் பல்வேறு விதிமுறைகளை விதித்தார். பாஜகவில் உள்ள பல்வேறு நிர்வாகிகள் குறித்து என்னிடம் தவறாகப் பேசினார். குறிப்பாக, பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசினார்.
இதனால் ஒரு கட்டத்தில் நீங்கள் செல்லலாம் என நான் திருச்சி சூர்யாவை அனுப்பி வைத்துவிட்டேன். இதை அனைத்தையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார் என திருச்சி சூர்யா கூறினார். இது குறித்து அண்ணாமலையிடம் நான் கேட்கும் பொழுது, இதுபோன்று நான் திருச்சி சூர்யாவிடம் கூறவில்லை என தெரிவித்தார்.
பாஜகவின் தலைமைக்கு இந்த விவகாரத்தை எடுத்துக் கூறியபோது அண்ணாமலை தான் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். திருச்சி சூர்யா மீது காவல் துறையில் புகார் அளிப்பது தொடர்பாக பாஜக மாநிலத் தலைமை தான் முடிவு எடுக்கும். சிறுபான்மையினர் பெண்களை அப்புறப்படுத்த வேண்டுமென திருச்சி சூர்யா இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
கட்சியில் இருக்கும்போது இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறாமல், பாஜகவை விட்டு வெளியேறி பழிவாங்கும் நோக்கத்தில் திருச்சி சூர்யா ஈடுபட்டுள்ளார். நான் அமர் பிரசாத் ரெட்டியிடம் பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய். அதை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன். திருச்சி சூர்யா என்னுடைய அலுவலகத்திற்கு வருகை தந்த வீடியோவை பத்திரிகையாளர் முக்தாரிடம் நான் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய். அதை, பத்திரிகையாளர் முக்தார் நிரூபிக்கத் தயாரா?" என சவால் விடுத்தார்.
இதையும் படிங்க:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!