திருச்சி:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளதாக முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென இந்த படத்தில் இருந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுவதாக தகவல்கள் வெளியானது.
அதற்கு காரணமாக, 'AK 62' படத்திற்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை, தயாரிப்பு நிறுவனத்துக்கு பிடிக்காததாலும், அதனை விக்னேஷ் சிவன் மாற்ற விருப்பம் தெரிவிக்காததாலும், இதன் காரணமாக விலகியதாகவும் கூறப்பட்டது. இதனால், அஜித்குமார் நடிக்க இருக்கும், 62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, லைகா நிறுவனம் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று (ஏப்ரல் 14) வெளியிடும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், எதுவும் வெளியாகவில்லை. எனவே, அஜித்குமாரின் பிறந்தநாளான வருகிற மே 1ஆம் தேதியாவது ஏதாவது அப்டேட் கிடைக்குமா என ரசிகர்கள் ஆர்வம் உடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், திருச்சி மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி அப்டேட் கேட்டுள்ளனர், திருச்சி தன்னைத்தானே செதுக்கியவர் அஜித் நற்பணி இயக்கத்தினர்.
அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், 'மிஸ்டர் லைகா அப்டேட் விடுங்க.. Quickஆ. #AK62 Waiting ல வெறியேத்தாதீங்க.. இப்படிக்கு, தன்னைத்தானே செதுக்கியவர் அஜித் நற்பணி இயக்கம், திருச்சி' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தின் அப்டேட்டை, கண்டம் விட்டு கண்டம் தாண்டி அவரது ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், மீண்டும் அதே ஆயுதத்தை AK 62 படத்திற்கும் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்குமாரின் தந்தை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பஞ்சுமிட்டாய் சேலை கட்டி..! பொன்னியின் செல்வன் பட நாயகியின் கண்கவர் க்ளிக்ஸ்!