திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினசரி துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக விமானத்தில் வரும் பயணிகள் பல்வேறு கோணங்களில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சட்ட விரோதமாக கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர் விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது. அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து உள்ளனர்.
இந்த சோதனையில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 29 இலட்சத்து 43 ஆயிரத்து ஐநூற்று எண்பத்து நான்கு ரூபாய் மதிப்பு உள்ள 476 கிராம் அதாவது 59.5 சவரன் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பின், கண்டறிந்த தங்க நகைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன்கள், வாட்ச் உள்ளிட்டப் பொருட்களில் தங்க நகைத் தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதனையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.