ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சியாம் சுந்தர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், '' ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடந்த ஆண்டைவிட 40 விழுக்காடு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 3 ஆயிரத்து 124.34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின்போது இதே காலக்கட்டத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயில் 75 விழுக்காடாகும். அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் நிகர வருவாய் 26 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 679.8 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 177.3 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வருவாய் ரீதியிலான செயல்பாடு சிறந்த முறையில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் வருமானம் 4,235 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் வருவாய் அளவு 5,000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன வரலாற்றிலேயே இத்தகைய வருவாய் ஈட்டப்போவது இதுதான் முதல் முறை. 2018- 19ஆம் நிதியாண்டில் 4,171.5 கோடி ரூபாய் மொத்த வருவாயாகும். இதில் லாபம் மட்டும் 168.5 கோடியாக உள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திருச்சி வழித்தடம் சிறப்பாக இயங்கிவருகிறது. இந்த வகையில் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் மூன்று புதிய வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. திருச்சியிலிருந்து அபுதாபிக்கும், திருச்சியிலிருந்து தோகாவுக்கும் நேரடி விமான சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படவுள்ளன.