தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் திருச்சி மாநாட்டுக்கு சிக்கல்.. அதிமுக முன்னாள் எம்பி புகார்! - Edappadi Palaniswami news

ஏப்ரல் 24-ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் மாநாட்டில், ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப‌.குமார் புகார் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் திருச்சி மாநாட்டுக்கு சிக்கல் - அதிமுக முன்னாள் எம்பி புகார்
ஓபிஎஸ் திருச்சி மாநாட்டுக்கு சிக்கல் - அதிமுக முன்னாள் எம்பி புகார்

By

Published : Apr 22, 2023, 6:36 PM IST

அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் அளித்த பேட்டி

திருச்சி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 24ஆம் தேதி திருச்சியில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி தரப்பினர் கூறி வருவதும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, தனது ஆதரவாளர்கள் உடன் இணைந்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் ஓபிஎஸ் பல்வேறு கட்டமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என்று கூறி, திருச்சியில் வரும் 24ஆம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார்.

மேலும், கடந்த 10ஆம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான பணிகளை, தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான கால்கோள் நடும் விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

அதேபோல், "திருச்சியில் வருகிற 24ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு, எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்பு முனையாக அமையும்" என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, ஓபிஎஸ் தனது அரசியல் நகர்வில் புதிய அத்தியாயம் எனக் கருதும் திருச்சி மாநாட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், "வரலாற்றுச் சிறப்பு மிக்க திருச்சியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு பிடிக்கதாக சிலர், இந்த மாநாடு நடக்காது என கூறுகிறார்கள். மேலும், எம்.ஜி.ஆர் கொடுத்த கொடி இது. ஆகையால், அவர் கொடுத்த கொடியைப் பயன்படுத்துவதை எவருக்கும் தடுக்க உரிமை இல்லை. எந்த நீதிமன்றமும் கொடியைப் பயனப்டுத்த தடை விதிக்கவில்லை.

குறிப்பாக, இந்த கொடியின் கீழ்தான் எங்களது கோட்டை கொத்தளம் அமைக்கப்படும். இந்த மாநாட்டில் மக்களின் எதிர்காலத்தை , தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் எடுக்க உள்ளார். நாங்கள் ஏன் புதிய கட்சி தொடங்க வேண்டும், எங்களுக்கு என்று கட்சியை எம்.ஜி.ஆர் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.இந்த கட்சியைக் காப்பாற்ற வல்லமை எங்களுக்கு உள்ளது. நாங்கள் புதிய கட்சியைத் தொடங்க அவசியம் இல்லை . நாங்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவோம். இதனால் ஓராயிரம் வழக்குகள் தொடர்ந்தாலும், அதை நாங்கள் சந்திக்கத் தயார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் தலைமையில், சுமார் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில், "அதிமுக கொடியும், சின்னத்தையும் திருச்சியில் ஓபிஎஸ் அணியினர் நடத்தும் மாநாட்டில் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் - இந்திய தணிக்கை துறை!

ABOUT THE AUTHOR

...view details