திருச்சி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஜான் தாமஸ் குமார் (32), இரண்டு வயதில் திருச்சியில் உள்ள ஒரு சமூக நல அமைப்பின் மூலம் தத்துக்கொடுக்கப்பட்டு உள்ளார். தற்போது தனது தாயுடன் மீண்டும் இணைவதற்காக தமிழ்நாடு வந்து, தாயை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
அவரது தத்தெடுப்பு ஆவணங்களில், தாயின் பெயர் 'மேரி' என்றும் தந்தையின் பெயர் சூசை என்றும் மட்டுமே உள்ளது. இதைத் தவிர அவரது குடும்பம் குறித்து வேறு எதுவும் பதிவிடப்படவில்லை. ஆகையால் தனது பூர்விகம் எது வென்று தெரியாமலும், தனது குடும்பம் தற்போது எங்கு இருக்கிறது என அறியாமலும் தவித்து வருகிறார் ஜான்.
‘எனது குடும்பம் எங்கே’: ஜான், தனது குடும்பத்தை தேடுவதற்காக, சிகாகோவில், காலநிலை மாற்றக் கொள்கை நிபுணராக இருந்த தனது வேலையை விட்டுவிட்டு, கடல் கடந்து இந்தியா வந்து தனது தேடலை தொடங்கியுள்ளார். இப்போது திருச்சியில் தனது தேடிம் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய அவர், “நான் உயிருடன் இருக்கிறேன், நலமாக இருக்கிறேன். இதனை என் தாயிடம் உரக்க கூறவேண்டும். மேலும் எனது தாய் நலமாக இருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன். என்னுடன் பிறந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?. அவர்கள் எப்படி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவைகள் இருக்கிறதா? என அறிய ஆவல்.
என் குடும்பம் பற்றி நான் முழுமையாக அறிந்துக்கொண்டால் மட்டுமே, நான் எனது பிறவிப் பயனை அடைவேன். எனது தத்தெடுப்பு ஆவணங்களில், எனது பெயர் சம்பத் குமார் என உள்ளது. எனது பூர்விகம் எதுவாக இருக்கும்” கண்களில் நீர் ததும்ப தன் மனதில் உள்ள கேள்விகளை வெளிப்படுத்தினார். மேலும் இதற்கான விடையை தேடி வருகிறார்.
பூர்விகத்தை தேடி அலையும் இளைஞர்:ஜான் தனது இரண்டு வயதிலிருந்து, அமெரிக்கக் குடும்பத்துடன், ஓஹியோவில் உள்ள யெல்லோ ஸ்பிரிங்ஸில் வசித்து வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் ஓஹியோவில் உள்ள கிராமப்புறங்களில் ஒரு காகசியன் குடும்பத்தில் வளர்ந்தேன். 19 வயது வரை எனக்கு தெரிந்த ஒரே இந்தியன் நான் தான். அதனால் எனக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி பற்றி எதுவும் தெரியவில்லை.
சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த, அமெரிக்க தந்தை, கடந்த 2005ஆம் ஆண்டு, அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது, எனது அமெரிக்க தாயார், விஞ்ஞானி மற்றும் கல்வியாளராக பணியாற்றினார். எனது தந்தை எனக்கும் என் சகோதரிக்கும் 2004இல் இந்தியாவுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாழங்கினார்.