மாநகராட்சி சொத்து வரி உயர்வு, உய்யக்கொண்டான் ஆற்றில் சாக்கடை கலப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வ சிங், மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வரவில்லை.
இத்தகைய சூழ்நிலைகளில் கவுன்சிலர்கள் இல்லாமல் வீட்டு வரி நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது நியாயமான செயல் கிடையாது. எனவே உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்தியில் மோடி ஆட்சி அமைத்து 50 நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் தினமும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுவருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் மீதான எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளதால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக வைப்புத்தொகையை இழக்கும்.
புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியை நாசமாக்கும் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. தற்போது புதிய அணைகள் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மேட்டூர், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். மேலும் இதனால் மாநிலம் முழுவதும் உள்ள தனித்தனி ஆறுகளின் நதி நீர் ஆணையம் நீர்த்துப்போகும்.
இதேபோல் முத்தலாக் மசோதா, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மசோதா, மருத்துவ மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் எதிர்கட்சிகளை கூட ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலிமையான இயக்கம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.