திருச்சி:அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் இன்று (ஜூன் 19) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறுகையில், "அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். 75 எம்எல்ஏக்களுடன் அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.
அதிமுக இரண்டு கோஷ்டிகளாக செயல்படுகிறது. திமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பவர்கள் ஒரு பக்கமும்; கடுமையான போக்கை கடைபிடிப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். அதிமுகவிற்காக உழைக்கக்கூடியவர்கள் ஒரு பக்கமும், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர்.
ஒற்றைத் தலைமை - கடைக்கோடி தொண்டனின் விருப்பம்: நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழிய, வழி மொழிய ஆதரவு இல்லாதவர்களுக்கு அதிமுக தலைமை பதவியை அறிவிக்கிறது. இதனை யாராவது கண்டித்தால் அவர் அடுத்த அணிக்குச்சென்று விடுகிறார். கோஷ்டி அரசியல் அதிமுகவிற்கு பின்னடைவை உருவாக்கும். அதிமுக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. கட்சியை புத்துணர்ச்சியோடும் எழுச்சியோடும் வீறுநடை போட வேண்டிய நிலை உள்ளது. திமுக எதிர்ப்பில் ஈபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.