திருச்சி: மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகள் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையிலிருந்து ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து கானல் நீரையே கண்டு வந்த மணப்பாறை தொகுதி மக்கள் காவிரி குடிநீர் வழங்கிய அப்போதைய முதலமைச்சரை தொகுதி மக்கள் பாராட்டி அகமகிழ்ந்தனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பழுதாகி வழி நெடுகிலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.
இதனால் மணப்பாறை நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும், மக்கள் பல கட்ட போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தற்காலிகமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர்.
ஆனால் பழுதான கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை முழுவதுமாக புதுப்பிக்க இயலாத நிலை தொடர்வதால் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நகராட்சி பகுதிகளில் ஒரு சில வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வார்டுகளில் உள்ளவை எல்லாம் பழுதான குழாய்கள் என காரணம் தெரிவிக்கப்பட்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடாக நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கியது.