தமிழ்நாடு அரசின் நிர்வாக ஆணையரும், கூடுதல் செயலாளருமான சத்ய கோபால் திருச்சியில் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இ-அடங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஆன்லைனில் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். நில அடங்கல் நகலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கு சேர்க்கப்படுகிறது. இதன்மூலம் வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் இந்த வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்படும். குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர் விவரங்களை பருவ காலம் வாரியாக பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் குறித்த புள்ளிவிவரங்கள் துள்ளியமாக கிடைக்கப்பெறும்.
விவசாயிகள் அளிக்கும் தகவல்களை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு இறுதி செய்வார்கள். இந்தத் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் பதிவுகள் தொடங்குகிறது. இதில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் கால மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 3000 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேரிடரால் ஏற்படும் சேதங்களை குறைக்கவும் இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உடன் இருந்தார்.
விவசாயிகளுக்கு ஆன்லைனில் நிவாரணம்