நடிகர் விஜய் படத்தை இயக்கும் நடிகர் விஷால்..? விரைவில் டைரக்டர் அவதாரம்... திருச்சி: நடிகர் விஷால், நடிகை சுனைனா நடிப்பில் விரைவில் வெளிவர உள்ளபடம் லத்தி. படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் லத்தி படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.ஏ. சினிமாஸ் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷால் பேட்டி:தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், "லத்தி படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டுகளில் இருந்தும் 1 ரூபாய் பணம் விவசாயிகளுக்கும், கல்லூரி சேர முடியாத நன்றாகப் படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கும் வழங்கப்படும். லத்தி படத்தில் போலீஸ் உயர் அலுவலராக நடித்திருந்தால் அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது. தற்போது கான்ஸ்டபிளாக நடித்திருப்பது தான் கூடுதல் வித்தியாசம்.
லத்தி படத்தில் கடைசி 45 நிமிடங்கள், எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும். ஓ.டி.டி தளம் 20 முதல் 25 சதவீத சினிமா பார்க்கும் மக்களை எடுத்துக் கொண்டது. இருப்பினும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைக் காண மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள்.
நடிகர் விஜயை இயக்க விருப்பம்:விஜய் படத்தில் நடிக்க தனக்கு எந்த தயக்கமும் இல்லை. பல படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் தற்போது நடிக்க முடியாது. நடிகர் சங்க கட்டடம் ஏற்கெனவே கட்டி முடிக்க வேண்டியது; தேர்தலை நிறுத்தி மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான், அந்தப் பணி நிறுத்தப்பட்டது. விரைவில் கட்டி முடிக்கப்படும்.
நடிகர் விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. நேரமும், காலமும் வரும்போது நல்ல கதையாக விஜய்யிடம் கூறுவேன். தொடர்ச்சியாக படம் நடித்துக் கொண்டு இருப்பதால் அரசியலுக்கு வருவது குறித்து அதற்குரிய காலத்தில் பதில் கூறுவேன்.
நண்பர் உதயநிதி அமைச்சர்:மேலும் நண்பர் மகேஷ் ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் போது, தற்போது உதயநிதியும் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. நடிகர் சங்கத்தின் கோரிக்கைகளை உரிமையுடன் அவர்களிடம் கேட்பேன்' என்றார். துப்பறிவாளன் 2 படம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என்றும்; மிஷ்கினுடன் இணையத் தயாராக இல்லை எனவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நண்பர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறை தயாராவதை ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில்!