திருச்சி:திருச்சியில் நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 23) ‘எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், இந்த கண்காட்சியை திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற மாநாடு புகைப்படங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை இந்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளன.
இதனை நடிகர் ஜோ மல்லூரி வடிவமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த புகைப்படக் கண்காட்சியை திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஏப்ரல் 25) பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், “முதலமைச்சருடைய வாழ்க்கை வரலாறு பற்றி புகைப்படக் கண்காட்சியினை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது தெரிந்து கொண்டது என்னவென்றால், எவ்வளவு பெரிய உயரத்தை அடைய வேண்டுமோ, அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டித்தான் வர வேண்டும் என்று தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைய விஷயங்களைத் தாண்டி, நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வந்திருக்கிறார்.