திருச்சி: ‘எங்கள் முதல்வர், எங்கள் பெருமை’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்படக் கண்காட்சியை திருச்சியில் திரைப்பட நடிகர் பிரபு இன்று (ஏப்ரல் 23) தொடங்கி வைத்தார். திருச்சி தூய வளனார் பள்ளி மைதானத்தில், முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலான இந்த கண்காட்சிக்கு, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தக் கண்காட்சியை பிரபு பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் எனக்கு சிறு வயதில் இருந்து பழக்கம் உண்டு. அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். இன்று அவர் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்திருப்பதற்கு, அவரது கடின உழைப்பு, விடாமுயற்சிதான் காரணம். திமுகவின் உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருக்கிறார்.
இதற்கெல்லாம் அவரது உழைப்புதான் காரணம். அவர் மக்களுக்காக எவ்வளவு இறங்கி வேலை செய்து வருகிறார் என்பதை, இந்த புகைப்படக் கண்காட்சி மூலம் நாம் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்டோர் சிறு வயதில் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஷெரிஃப் என்கிற ஒரு மாட்டு வண்டிக்காரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் நாங்கள் திருச்சியையே சுற்றி வந்துள்ளோம்.