திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலை, கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் "மக்களை தேடி" என்ற குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் குறைகளை தீர்க்க திமுக அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரச்னைகளை புரிந்து கொண்டால் தான், அதற்கு தீர்வு காண முடியும் என்பதால், இந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் முழு தேர்ச்சி வழங்கப்பட்டது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும் வரை அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது தெரியவந்துள்ளது.