ஆதித்தமிழர் பேரவை திருச்சி மண்டல தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (டிச.19) நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் குயிலி தலைமை வகித்தார். முன்னதாக நிறுவனர் அதியமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தலில் தனித் தொகுதிகளில் அருந்ததியர் இன மக்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். திமுக கூட்டணி வெற்றிக்காக ஆதித்தமிழர் பேரவை தேர்தல் பணியாற்ற தொடங்கிவிட்டது.
கிராமந்தோறும் திண்ணைப் பிரச்சாரம் செய்து திமுகவை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அரசியல் செயல்பாடுகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஒடுக்கும் செயல்களில் தமிழ்நாடு அரசு ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது.