திருச்சி:ஒவ்வொரு தமிழ் மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். இந்த ஆடி மாதத்தில் கோயில்களில் சிறப்புப் பூஜை, சிறப்பு வழிபாடு என்று நகரங்களும், கிராமங்களும் விழாக் கோலமாகக் காணப்படும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை எனப் பல விசேஷ நாட்களைக் கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஆகியோர் காவிரி அன்னைக்குப் பெரிய வாழை இலை போட்டு அதில் முக்கனி உள்ளிட்ட பல்வேறு வகையான பழ வகைகளை வைத்தும், காப்பரிசி, கருகமணி, முளைப்பாரி வைத்தும் வழிபட்டனர். மேலும் சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றைக் கட்டி கொண்டனர்.
புதுமண தம்பதிகள் தாலி பிரித்துக் கட்டும் வைபவங்கள் என அனைத்து நிகழ்வுகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆடிப்பெருக்கு நாளில் திருச்சி மாநகர பகுதிகளில் அம்மா மண்டபம், கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோயில் படித்துறை, காந்தி படித்துறை, ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர். இதே போலக் காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் காவிரி அன்னைக்குச் சீர் கொடுக்கும் நிகழ்வு இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.