Jallikattu:திருச்சி:சூரியர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த பார்வையாளர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை அடக்குவதையும், காளைகள் வீரர்களை ஓடவிடுவதையும் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்தனர். போட்டியை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.