கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் திருச்சி:இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று (டிச.25) கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் (Christmas) கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
உலகில் பிறந்து தங்களுக்காக சிலுவையில் தனது இன்னுயிரை, தியாகம் செய்த இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே விழாக் கோலமாக காணப்பட்டது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் உள்ள உலக மீட்பர் பசிலிக்கா ஆரோக்கிய மாதா ஆலயம், லூர்து அன்னை ஆலயம் மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள பழைய கோயில் தேவாலயம் ஆகிய பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது.
இதில் சிறுவர்கள், இளைஞர்கள் வயதானவர்கள் என்று ஏராளமான மக்கள் குடும்பமாக வருகை தந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிறிஸ்துவ மக்கள் ஒரு மாத காலமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்க காத்திருந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விழா தேவாலாயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் உன்னதத்தை கொண்டாடும் அதே வேளையில், பிறருக்கு உதவுவது, மனித நேயத்துடனும், சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்வது, ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி மகிழ்வாக இருப்பது என்பன இந்நாளில் நினைவுக்கூறப்படுகின்றன. அதேநேரத்தில், சென்னை மற்றும் தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்காக இந்த கூட்டு பிரார்த்தனையின் போது ஜெபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இது சாதா குடில் இல்ல... வேற வேற... விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடில்!... அசத்தும் ஓவிய ஆசிரியர்!